ஈரானுடன் இடம்பெற்ற 21 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஒரு உடன்பாடும் எட்டப்படாததால், தனது பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வேன்ஸ், அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகக் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“கெட்ட செய்தி என்னவென்றால், நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை. இது அமெரிக்காவிற்கு கெட்ட செய்தியாக இருப்பதை விட ஈரானுக்குத்தான் மிகவும் கெட்ட செய்தி என்று நான் நினைக்கிறேன்,”. “ஆகவே, அமெரிக்கா ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்ற விஷயத்திற்கு மீண்டும் வருகிறோம். எங்களின் நிபந்தனைகள் என்ன என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆறு முறை பேசியதாக வேன்ஸ் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை ஈரான் அரசாங்கம் வெளியிட்ட X தள பதிவில், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும், இரு தரப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளது.
“சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தொடரும்,” என்று அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டிருந்தாலும், அவை எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விடயங்கள் குறிப்பிடவில்லை.
வேன்ஸ், விசேட தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஓய்வெடுப்பதற்கு முன்பு ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரை இரண்டு மணி நேரம் சந்தித்து கலந்துரையாடினர் என மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய தூதுக்குழுவினர், மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்ட மற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்பு உடை அணிந்து வெள்ளிக்கிழமை பாகிஸ்தானை சென்றரைந்துள்ளனர்.
இராணுவ வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சில மாணவர்களின் காலணிகளையும் பைகளையும் அவர்கள் கொண்டு சென்றதாக ஈரானிய அரசாங்கம் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பென்டகன் கூறியுள்ள நிலையில், இதற்கு அமெரிக்காவே காரணமாக இருக்கக்கூடும் என இராணுவ புலனாய்வாளர்கள் நம்புவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள், ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இடம்பெற்ற முதல் நேரடி அமெரிக்க-ஈரான் சந்திப்பாகும்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடந்த மிக உயர்ந்த மட்டத்திலான கலந்துரையாடல்களும் இதுவே ஆகும். இந்த பேச்சுவார்த்தையின் முடிவானது, நிலையற்ற இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் போக்கையும், போர் தொடங்கியதிலிருந்து ஈரான் தடுத்துள்ள, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20%-க்கு ஒரு முக்கியத் தடையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும் தீர்மானிக்கக்கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது.
இந்த மோதல் உலகளாவிய எண்ணெய் விலைகளை பாரிய அளவுக்கு அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்களையும் பாதித்துள்ளது.







