பேருந்து நிறுத்தும் இடங்களை தடுக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் அல்லது விட்டுச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இலங்கை பொலிஸ் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலுக்கும், பயணிகள் ஏறி இறங்கும்போது பாதுகாப்பு அபாயத்திற்கும் வழிவகுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக சக்கர நாற்காலி வசதி கொண்ட பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த பிரச்சினை முக்கியமானதாக மாறியுள்ளது.
பேருந்து நிறுத்தங்கள் அடைக்கப்படுவதால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏனைய பயணிகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அரச வர்த்தமானி அறிவிப்பின்படி:
சாதாரண பேருந்து நிறுத்தம்: பேருந்து நிறுத்தத்தில் இருந்து 30 மீட்டருக்குள்ளும், அதன் வெளியேறும் இடத்தில் இருந்து 15 மீட்டருக்குள்ளும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வளைவு (Bus Bay) உள்ள நிறுத்துமிடம்: நிறுத்தத்தில் இருந்து 15 மீட்டருக்குள்ளும், அதன் வெளியேறும் இடத்தில் இருந்து 10 மீட்டருக்குள்ளும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழிவகுப்பது, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








