இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவு கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தின் எண்டே நகரில் இருந்து 68 கிலோமீட்டர் வடமேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் பதிவாகின.
ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டதாக அந்நாட்டின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் BNPB கூறியது.
இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம் சுமார் 5 லட்சம் மக்கள் வலுவான அதிர்வை உணர்ந்தனர். நன்கு கட்டப்பட்ட கட்டடங்களில் லேசானது முதல் மிதமான சேதமும், மோசமாக கட்டப்பட்ட கட்டடங்களில் பலத்த சேதமும் ஏற்படக்கூடிய அளவிற்கு அதிர்வு காணப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பகுதியான பாலிக்கும் அருகில் உள்ள சுந்தா தீவுகளில் ஒன்றான ஃபுளோரஸ், பசுமையான மலைகளுக்கும், வண்ணமயமான எரிமலை ஏரிகளுக்கும் பெயர் பெற்றது.
கொமோடோ தேசிய பூங்காவிற்கான நுழைவாயிலாகவும் இது உள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் சிறிய கிராமங்களில் வாழ்கின்றனர்
பல தீவுகளைக் கொண்ட பகுதி என்பதால் அணுகுவது சிரமமாக உள்ளது. இதனால் ஹெலிகொப்டர் மற்றும் அவசரகால மீட்பு குழுக்களை* BNPB அனுப்பியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.
ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, வீடுகள் மற்றும் அரச அலுவலகங்கள் உட்பட 15 கட்டடங்கள் வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








