போதைப்பொருட்களை உட்கொண்டு மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறியும் விசாரணைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப்பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் W. P. J. சேனாதீர, இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமும் நடைபெறும் உயிரிழப்பு மற்றும் பாரதூரமான வீதி விபத்துக்கள் தொடர்பில் ஆய்வு செய்ததில், போதைப்பொருள் பயன்பாடு, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், அபாயகரமான மற்றும் கவனக்குறைவான வாகனம் செலுத்துதல் அத்துடன் அதிக களைப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பஸ் சாரதிகள் மீது மேலதிக கவனம் செலுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சேனாதீர குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய பல பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அத்துடன், எந்தவொரு பஸ் சாரதியும் அதிவேகமாக, போட்டித்தன்மையுடன், ஒழுக்கமின்றி அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தினால், அது தொடர்பில் வாகனத்தின் இலக்கம் தெளிவாக தெரியும் வகையில் காணொளி ஒன்றை 070 47 55 600  என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

இவ்வாறு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தராதரம் பாராமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் குறித்த அதிகாரி மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here