நாட்டில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நுகேகொடை – நாவல வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள், அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு அருகில் தாழ் வளிமண்டலத்தில் நிலவும் நிலையற்ற வளிமண்டல நிலைமைகள் காரணமாக இப்பிரதேசங்களில் மேகமூட்டமான காலநிலை காணப்படுவதாகவும், இடையிடையே மழையும் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்நில பிரதேசங்களில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெள்ள அபாயம் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








