ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (LDO 10/2026) அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்றும், பல திருத்தங்களுக்கு உட்பட்டு பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.

இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக கூறினார்.

பதில் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குழு நிலையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் நீதிமன்றத்தால் பணிக்கப்பட்ட மேலதிக திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, சட்டமூலத்தின் நீண்ட தலைப்பு, முகவுரை மற்றும் குறிப்பிட்ட சரத்துக்கள் உள்ளிட்ட தொடர்புடைய ஏற்பாடுகள், பதில் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைய குழு நிலையில் திருத்தப்பட வேண்டும்.

சட்டமூலத்தில் இருந்து 6 ஆவது சரத்து நீக்கப்படும் என்றும், அதேபோல் முதலாவது அட்டவணையில் உள்ள 15, 16, 17 மற்றும் 33 ஆவது விடயங்களும் நீக்கப்படும் என்றும் பதில் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானம் அன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here