மாலைத்தீவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாட்டுக்கு திரும்பினார்.

மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மாலைத்தீவு தலைவர் உட்பட அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதன்படி,

மாலைத்தீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே ஒப்பந்தம்,

அதேபோன்று பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்தானது.

இவை இரு நாடுகளின் உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.

ஜனாதிபதிக்கு மரியாதையாக, ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ ஹோட்டலில் விசேட இராப்போசன விருந்தும் வழங்கப்பட்டது.

மேலும், இலங்கை – மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் குறிக்கும் வகையில், மாலே நகரின் சுல்தான் பூங்காவில் மரக்கன்றொன்றை நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, மாலைத்தீவில் உள்ள இலங்கை வர்த்தகமன்றத்தினரைச் சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு வாழும் இலங்கையர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் ஜனாதிபதியுடன் இணைந்து கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here