உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு (CEB) ரூ. 201,059.90 இழப்பீடு வழங்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்திருப்பதாவது,
ஜூலை 21 அன்று கம்புருபிட்டியில் குடும்ப பிரச்சினை காரணமாக அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் உயர் அழுத்த பரிமாற்ற அமைப்பிற்கு சொந்தமான மின் கோபுரத்தில் ஏறியுள்ளார்.
இதன் காரணமாக திஹாகொட, கம்புருபிட்டிய, அக்குறஸ்ஸ, முலட்டியன, தெய்யன்தர, மவரல, தெனியாய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.
பொலிஸார் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்து சமாதானப்படுத்தியதை அடுத்து அவர் கீழே இறங்கினார்.
எவ்வாறாயினும் உடனடியாக கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனை அடுத்து ஜூலை 24 அன்று பிரதம நீதவான், மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பை கணக்கிடுமாறு கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதேவேளை சந்தேகநபர் மேலும் ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜூலை 28அன்று வழக்கு மீண்டும் எடுக்கப்பட்ட நிலையில், மின்சார சபைக்கு 200,000 க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர். சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் குறித்த தொகையை மின்சார சபைக்கு செலுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அடுத்த விசாரணை நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







