அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கான மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புகளை கோரும் கால எல்லை நவம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடைந்தமையால், தகவல்களை புதுப்பித்த பின்னர் வெளியிடப்பட்ட புதிய தகுதி பெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியலில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட பயனாளிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் சில வருமாறு,
புதிய அஸ்வெசும பயனாளிகளுக்கு நன்மைகளை வழங்குவதற்காகவே ஒதுக்கப்பட்ட சமூக பாதுகாப்பு நன்மைகள் கணக்கு ஒன்றை திறக்க வேண்டும்.
கணக்குகளை ஆரம்பிப்பதற்கான பரிந்துரை கடிதங்களை வழங்குவது இன்று (17) ஆம் திகதி முதல் தாம் சார்ந்த பிரதேச செயலக அலுவலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் இருந்து மேற்கொள்ளப்படும்.
வங்கி கணக்கு அரச வங்கி ஒன்றின் கணக்காக காணப்பட வேண்டும்.
வங்கி கணக்கை திறந்த பின்னர் பயனாளிகள் மீண்டும் தாம் சார்ந்த பிரதேச செயலக அலுவலகத்திற்கு வந்து சமூக பாதுகாப்பு தகவல் ஆவணத்தில் கணக்கு தகவல்களை புதுப்பிப்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








