கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களை அடிப்படை வசதிகளுடன் மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (30.01.2025) வியாழக்கிழமை இடம்பெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  முகமாலை, இத்தாவில் மற்றும் வேம்பொடுகேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முகமாலை கிராம அலுவலர் பிரிவின் பொது நோக்கு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல்  கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இங்கு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிய கடந்த கால  உள்நாட்டு யுத்தம்  காரணமாக இப்பகுதி அதிகமாக பாதிப்படைந்திருந்தது. குறித்த பகுதிகளில் மீள் குடியேற்றத்தினை தரிதப்படுத்தும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களாகிய நீங்கள் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் சில பகுதியினர் ஆரம்பத்தில் மீள்குடியேறுவதாக சம்மதம் தெரிவித்தாலும் பின்னர் தயக்கம் காட்டுகின்றனர். இவ் விடயம் தொடர்பில்  தெல்லிப்பளை  பிரதேச செயலாளராக கடமை ஆற்றிய காலப்பகுதியில்  தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மீள்குடியேற்ற செயற்பாட்டினை  நீண்ட காலங்களுக்கு இழுத்துச் செல்ல முடியாது. இந்த வருடம்  அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. எனவே இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நீங்கள் அனைவரும் சரிவரப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறித்த பிரதேசத்தில் செயற்படும் மிதிவெடி அகற்றும் நிறுவனங்கள் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் மீள்குடியேற்ற வேண்டிய குடும்பங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக நடைபெற்றது.

இதன் போது, குறித்த பகுதிகளில் மீள்குடியேற்ற தேவைப்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரால் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து, துறை சார்ந்த திணைக்கள தலைவர்களால் குறித்த பகுதிகளில் தங்களது திணைக்களத்திற்குட்பட்ட விடயங்கள் தொடர்பில் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

மேலும் குறித்த பகுதிகளில் கண்ணிவெடியகற்றல் செயல்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்த ஆண்டுடன் கண்ணிவெடிகளை அகற்றி குறித்த காணிகளை மக்களிடம் முழுமையாக கையளிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக வீதி, வீட்டுத்திட்டம், மலசலகூடம், கிணறு, மின்ணைப்பு, வாழ்வாதாரம், ஆலயங்கள் முதலிய பல்வேறு மீள் குடியேற்ற தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

முகமாலை கிராம அலுவலர் பிரிவின் பொது நோக்கு மண்டப வளாகத்தில் இரு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here