உலகளாவிய ரீதியில் மைக்ரோசாப்ட் Microsoft நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிகாரசபை குறிப்பிட்டுள்ளதாவது, இன்று (13) காலை முதல் விமான சேவைகள் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக இக்காலப்பகுதியில் விமான சேவை துறையின் பங்குதாரர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அவசர விசாரணைகள் அல்லது உத்தியோகபூர்வ விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட( CAASL ) அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் அல்லது உத்தியோகபூர்வ நிலையான தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிலைமை காரணமாக அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவை தொடர்ந்தும் நடைபெறும் என்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியவுடன் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








