கொழும்பில் உள்ள 3 உணவு வர்த்தக நிறுவனங்களுக்கு 148 உணவு பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தமாக 444,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இயங்கும் 2 சீன உணவகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்று இவ்வாறு அபராதம் செலுத்தியுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையை அடுத்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, இன்று (13) வெள்ளிக்கிழமை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
2 சீன உணவகங்களுக்கு ரூ.360,000 அபராதம்
கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் இயங்கும் 2 சீன உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 120 குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தமாக ரூ.360,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திடீர் சோதனையின் போது, முறையான லேபிள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை மற்றும், நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருட்களும் அந்த நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சீன ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு ரூ.84,000 அபராதம்
மற்றொரு தனி வழக்கில், சீன ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்று தரம் குறைந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்தமை உட்பட 28 குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ரூ.84,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் ஐஸ்கிரீம் மாதிரிகளை பெற்று கொழும்பு மாநகர சபையின் நகர ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு அனுப்பிய போது, அவை தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 28 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
3 வர்த்தக நிறுவனங்களுக்கும் சேர்த்து 148 குற்றச்சாட்டுகளுக்கு மொத்தமாக ரூ.444,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையத்தின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.








