யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து நேற்று (18.08.2025) மதியம் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கடல் விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில் பல்டி அடித்த போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமுற்ற இளைஞரை உடனடியாக நண்பர்கள் மீட்டு உழவு இயந்திரத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரை பரிசோதித்த வைத்தியர் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிசார் சக நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் தாளையடி கடற்கரை பாதுகாப்பு அற்ற ஒன்றாக காணப்படுகின்றது.அதிகமான சுற்றுலா பயணிகள் கடற்கடற்கரைக்கு வந்து செல்கின்ற போது கடல் குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும் தாளையடி பகுதியில் எந்த வித ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதால் அதிகாரிகள் கவனம் எடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(யாழ் நிருபர்- கஜிந்தன்)








