முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதவான் ஜூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டால், அதற்குத் தேவையான வசதிகளை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் தயாராக இருப்பதாகும்.
பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தது. அவர் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நாளில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நீர் இழப்பு காரணமாக அவர் முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் (23) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது, ஐந்து விசேட வைத்தியர்களைக் கொண்ட குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது.
இதற்கிடையில், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, நபர்கள் மற்றும் பயணப் பொதிகள் கடுமையாகச் சோதனை செய்யப்படுகின்றன.
மேலும், கியூ வீதிக்குள் சட்டத்தரணிகள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








