நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை ‘லங்கா சதொச’ மூலம் பொதுமக்களுக்கு கிலோ ஒன்றுக்கு 220 ரூபா கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஒரு தேங்காய் 130 ரூபா விலையில் லங்கா சதொச ஊடாக புறநகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 200,000 கிலோ அரிசியை லங்கா சதொச ஊடாக ஒரு கிலோ ரூபா 220 என்ற விலையில் விற்பனை செய்வதற்கு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது உள்ளுர் சந்தையில் அரிசிக்கான தேவை மற்றும் அதிக மழையினால் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற்கொண்டு, அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் 20ஆம் திகதி நள்ளிரவு வரை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக சந்தையில் அரிசி கிடைக்கச் செய்து இப்பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும்.
அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாட்டைத் தீர்க்கவும், நுகர்வோர் சுரண்டுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 1 மில்லியன் தேங்காய்கள் சந்தைக்கு விடப்படும்.
கடந்த காலங்களில், பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்க தலையிட்டனர்.
அந்த நபர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்து வருகிறோம். இல்லையெனில், மக்கள் சிரமத்திற்கு ஆளாவதையும், சுரண்டுவதையும் தடுக்க அரசு என்ற வகையில் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்,” என்றார்.








