வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தப் பட்டியலில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்யலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.
முன்னதாக அக்டோபர் 22ஆம் திகதி வரை மட்டுமே மேன்முறையீட்டுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த கால அவகாசம் அக்டோபர் 27ஆம் திகதி (27.10.2025) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பற்றிய விசேட கலந்துரையாடல் நேற்று (15.10.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆளுநர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழு ஒவ்வொரு ஆசிரியரின் மேன்முறையீட்டையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.
மேலும், மேன்முறையீட்டுக் குழுவினால் நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கருதும் எந்தவொரு ஆசிரியரும், தொடர்ந்து மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அல்லது ஆளுநரிடம் நேரடியாக மேன்முறையீடு செய்யலாம் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.








