ஹாலி-எல உணுகொல்லவில் உள்ள தோட்ட முகாமையாளர் விடுதியை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஆக்கிரமித்துள்ளதாகவும் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (10.12.2024) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை அங்கிருந்து வெளியேற்றாமல் இருந்தால் குறித்த பெருந்தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் டிக்வெல்ல தோட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் 13 வருடங்களாகப் பலவந்தமாகத் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, தியத்தலாவ பொலிஸ் கந்த பகுதியில் அரசியல் ரீதியாகக் காணி சீர்திருத்த ஆணைக்குழு காணி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அமைச்சர் கூறிய இருவரை போல மேலும் பலரும் உள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மிகவும் அநியாயமாக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நலன்களுக்கு ஏற்ப செயற்படுவதைக் காணமுடிகிறது.
அதன் காரணமாக பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி விநியோகத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கு பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர்களின் செயற்பாடு குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.
அதேவேளை, மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க தலா 28 இலட்சம் ரூபாய் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.








