வாகன இறக்குமதி மீதான சுங்கத்தின் மேலதிக கட்டணத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீக்குவது தொடர்பான தீர்மானம், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு நிலவரத்தை பொறுத்தே அமையும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், வாகன விலை மற்றும் இறக்குமதி வரி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடையின் பின்னர் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்களுடன் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இறக்குமதி இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

வாகன இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக எரிபொருள் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேலதிக சுங்க கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே டிசம்பர் 31க்கு பின் மேலதிக் கட்டணம் நீக்கப்படுமா என்பதை தற்போது உறுதியாக கூற முடியாது என்றும், அப்போதுள்ள அந்நிய செலாவணி நிலைமையை பொறுத்தே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வரி வலைப்பின்னல் விரிவடைந்து வரி வசூல் அதிகரிக்கும் போது, நேரடி, மறைமுக மற்றும் இறக்குமதி வரிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அரசு எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

அந்நிய செலாவணி மற்றும் அரச வருமானம் ஸ்திரமடையும் பட்சத்தில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றார்.

மக்கள் மீதான வரிச்சுமையை குறைத்து வாகன கொள்வனவை மலிவாக்குவதே அரசின் நீண்டகால கொள்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here