அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சீட் பெல்ட் (வாகன ஆசன பட்டி) அணியத் தவறியமைக்காக சுமார் 3,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆசன பட்டி விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனதீர, சாரதிகள் மற்றும் பயணிகளைப் பாதுகாப்பதே முதன்மை நோக்கமாகக் கொண்டு பயணிகள் பாதுகாப்பு பட்டி (சீட் பெல்ட்) சட்டம் இப்போது கண்டிப்பாக அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்த விதிமுறைகள் வெறுமனே வீதிப் பயனாளர்களை தண்டிப்பதற்காக அல்ல, மாறாக பொது பாதுகாப்புக்காகவே அமுல்படுத்தப்படுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மணிக்கு 100 கி.மீ வேகம் வரை பயணிக்க அனுமதிக்கப்படுவதால், திடீர் பிரேக் பிடித்தல் அல்லது விபத்து ஏற்படும் போது சரியாக கட்டுப்படுத்தப்படாத பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிப்பதாக சேனதீர குறிப்பிட்டார்.
குறித்த சட்டம் அமல்படுத்தப்பட்ட மறுநாள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 11 வாகனங்கள் மோதிய விபத்தை அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
விபத்தில் சிக்கிய பயணிகள் சிறு காயங்களுக்கு மாத்திரமே உள்ளானார்கள், அதே நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அதிவேக விபத்துகளின் போது காயங்களின் தீவிரத்தை குறைப்பதில் சீட் பெல்ட்களின் செயல்திறனை இந்த சம்பவம் நிரூபித்ததாக அவர் கூறினார்.
பயண பாதுகாப்பு பட்டிகளை பொலிஸ் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக மாத்திரம் அணியக்கூடாது, மாறாக தங்கள் உயிர்களைப் பாதுகாக்கும் ஒரு அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கையாக அணிய வேண்டும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சேனதீர வலியுறுத்தினார்.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, பயணத்தின் போது பட்டிகளை அணிவதன் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.







