முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ராஜபக்ஷ, இன்று (05) குறித்த விண்ணப்பத்தை தாக்கல் செய்து, கைது செய்யப்பட்டால் எந்தவொரு நிபந்தனையின் கீழும் தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இந்த விண்ணப்பம் மாளிகாகந்தை நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பிரதிவாதியாகவும், ஷிரந்தி ராஜபக்ஷ மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு சிராந்தி ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிரந்தி ராஜபக்ஷ தற்போது மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ளார்.
முந்தைய நாள் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், செப்டம்பர் 16 அன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டார்.
அவர் புறப்படும் நேரத்தில், செப்டம்பர் 24 அன்று நிதி குற்ற புலனாய்வு பிரிவு முன் ஆஜராகுமாறு பொலிஸார் ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ராஜபக்ஷ வெளிநாடு பயணம் செய்ததாக அந்த பிரிவு பின்னர் தெரிவித்தது
எனினும், சிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற தகவல்களை ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவதற்கு முன்பு நிதி குற்ற புலனாய்வு பிரிவிடமிருந்து எந்த அழைப்பாணையும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், சிராந்தி ராஜபக்ஷ விமான நிலையத்தை வந்தடைந்து இலங்கையை விட்டு வெளியேற தயாராக இருந்த போதே அழைப்பாணை கிடைத்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








