தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் அதன் ஊழியர்கள் இருவர் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிறுவனம் தொடர்பில் 245 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்தை மற்றும் கடுவலை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் இருவரும் அங்கு பிரதான விற்பனை முகாமையாளராகவும், செயற்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வெளியான தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்களிடம் இருந்த 4 கார்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பண மோசடி தொடர்பில் குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here