‘‘முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால், இவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை’’ எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம மாவத்தை வீடு 3,128 மில்லியன் ரூபா பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை கொண்டதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் உட்பட பல கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்களின் செலவு அறிக்கையை குறிப்பிட்டிருந்தார். மேலும் கோட்டாபய ராஜபக்ஷ , ரணில் விக்கிரமசிங்க  ஆகியோர் தங்களது இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு 07 பகுதியில் 1005.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்பட்டது. அவர் இன்றும் அந்த வீட்டில் தான் வசிக்கிறார். அந்த வீட்டின் நடைமுறை சந்தை மாத வாடகை 09 இலட்சம் ரூபா.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம மாவத்தை வீடு தொடர்பில் குறிப்பிட்டதன் பின்னர் மஹிந்தவின் வீட்டை பாதுகாப்போம் என்று அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடு 01 ஏக்கர் 13.8 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 3,128 மில்லியன் ரூபா பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை பெறுமதியானது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வசிக்கும் வீட்டின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை. அவர் நாடு திரும்பியதும் வீட்டை மதிப்பிடுமாறு குறிப்பிட்டுள்ளார். ஆகவே வெகுவிரைவில் அந்த வீட்டின் பெறுமதி தொடர்பான விபரங்கள் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் வீடுகளை பராமரிப்பதற்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டுக்கு பெருமளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டுமுதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் வசித்துள்ளார். இக்காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீட்டை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் 430 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஏன் முன்னாள் ஜனாதிபதிகளையும் அவர்களின் குடும்பத்தாரையும் பராமரிப்பதற்கு பணம் செலவழிக்க வேண்டும்? வெட்கம் என்பதொன்று இருக்குமானால் இவர்கள் இந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். வீடுகளில் இருப்பவர்களுக்கும் வெட்கமில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். ஒருவர் கடற்படையில் இருந்ததாகவும் பிறிதொருவர் விஞ்ஞானி என்றும் குறிப்பிடப்படுகிறது. பெற்றோரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களின் பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் அரச இல்லங்களை விட்டு வெளியேற வேண்டுமென பிரத்தியேகமாக குறிப்பிடத் தேவையில்லை. வெட்கம் என்பதொன்று இருக்குமானால் இவர்கள் வெளியேற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here