போர்த்துக்கல் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆந்திரேஸ் சில்வா, இன்று காலை ஸ்பெயினில் இடம்பெற்ற திடீர் சம்பவத்தில் உயிரிழந்ததாக போர்ச்சுகீசிய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி, போர்த்துக்கல் கால்பந்து மற்றும் உலகக் கால்பந்துத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டியாகோ ஜோட்டா ஒரு சிறந்த வீரராக மட்டுமல்ல, தனது சமூகத்தில் ஒரு வழிகாட்டியாகவும், சக வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்களிடையே மரியாதை பெற்றவர்,” என போர்த்துக்கல் கால்பந்து சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

29 வயதான ஜோட்டா, போர்த்துக்கல் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் 2019 மற்றும் 2025 ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக் கோப்பை வென்ற அணியின் முக்கிய உறுப்பினராவார்.

இங்கிலாந்தின் லிவர்பூல் அணிக்காக அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்த ஜோட்டா, 26 போட்டிகளில் 6 கோல்களும் (Goal)  4 உதவிக் கோல்களும் (Assists) அடித்துள்ளார்.

ஜோட்டா தனது விளையாட்டு வாழ்க்கையை போர்த்துக்கல் கிளப் பாக்கோஸ் டி ஃபெரீராவில் தொடங்கி, பின்னர் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மெட்ரிட், போர்ட்டோ, மற்றும் இங்கிலாந்தின் வுல்வ்ஸ் அணிகளில் ஒரு நட்சத்திர வீரராக விளங்கிய பின்னர், 2020இல் லிவர்பூலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் FA கப், லீக் கப் மற்றும் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல வெற்றிகளை பதிவு செய்தார்.

லிவர்பூல் கால்பந்து கிளப்பும், “டியாகோ ஜோட்டாவின் திடீர் மரணத்தால் நாங்கள் உள்மனதளவில் வருத்தப்படுகின்றோம். இந்த பேரிழப்பை எதிர்கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here