ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், கமில் மிஷாரவின் ஆட்டமிழக்காத 73 ஓட்டங்களின் பலத்தால் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை தோற்கடித்தது.
இந்த வெற்றியால், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை பெற்றது. தடிவனாஷே மருமானி அதிகபட்சமாக 51 ஓட்டங்களை எடுத்தார்.
இலங்கை இலக்கை துரத்திச் சென்றபோது, மிஷார – குசல் பெரேரா கூட்டணி 117 ஓட்டங்களைச் சேர்த்து அணியை வெற்றிக்குத் தூண்டியது. மிஷார 43 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களை எடுத்தார். பெரேரா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பங்களித்தார்.
இலங்கை 17.4 ஓவர்களில் 193 ஓட்டங்களை எடுத்து இலக்கை எட்டியது. போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷாரவும், தொடரின் சிறந்த வீரராக துஷ்மந்த சமீரவும் தெரிவானார்கள்.
முந்தைய ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








