இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் நேற்றிரவு (07) நிகழ்ந்தது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்ததால் ஏற்பட்ட இந்த கிரகணத்தில், சந்திரன் அடர் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் மின்னியது.
இதனால் “இரத்த நிலவு” என அழைக்கப்படும் திகைப்பூட்டும் காட்சி வானில் தோன்றியது.
ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தை தெளிவாகக் காண முடிந்தது.
குறிப்பாக இலங்கை, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வானம் தெளிவாக இருந்ததால், மக்கள் முழு கிரகணப் போக்கையும் அனுபவிக்க முடிந்தது.
சில இடங்களில் மேகமூட்டம் இருந்தபோதிலும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் மக்கள் இந்த அரிய நிகழ்வை ரசித்தனர்.








