இலங்கையின் 13வது அரசியலமைப்பு திருத்தம், கூட்டாட்சி மற்றும் நிர்வாக சபைகள் குறித்து பேசுவது, தமிழரை மீண்டும் காலனித்துவ கட்டமைப்புக்குள் சிக்க வைக்கும் முயற்சி என, அமெரிக்கத் தமிழர் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் விடுதலைக்கான பாதை 13வது திருத்தத்திலும் கூட்டாட்சியிலும் இல்லை; மாறாக, ஐக்கிய நாடுகள் 1960 காலனித்துவ நீக்கப் பிரகடனத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட சுயநிர்ணய உரிமை வழியே உள்ளது” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தமிழர் அமைப்பு, ஈழத்திலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், ஐ.நா. தீர்மானம் 1514-இன் அடிப்படையில் தங்கள் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காக ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியதாவது,
1833ஆம் ஆண்டு கோல்புரூக்-கேமரூன் சீர்திருத்தங்கள் மூலம், தமிழர் ஒப்புதல் இல்லாமல் தீவில் இருந்த மூன்று தனித்துவமான இராச்சியங்கள் — யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டே இராச்சியம் — வலுக்கட்டாயமாக ஒரே நிர்வாகத்தில் இணைக்கப்பட்டன.
1948 சுதந்திரத்திற்குப் பின்னரும், தமிழர்களின் இறையாண்மை புறக்கணிக்கப்பட்டது என்றும், அது சுயநிர்ணயக் கொள்கைக்கு முரணானது என்றும் அமைப்பு குற்றஞ்சாட்டியது.
அத்துடன், கடந்தகால தமிழ் தலைவர்கள் கூட்டாட்சி மற்றும் நிர்வாக சபைகள் குறித்து பேசிச் செய்த “அரசியல் தவறுகளை” மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த அமைப்பு, தமிழர் வரலாறு, மனித உரிமைகள் மற்றும் தமிழர் தாயகத்தின் முடிக்கப்படாத காலனித்துவ நீக்கம் குறித்து விழிப்புணர்வை ஊக்குவிப்பதை தமது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.








