நக்கிள்ஸ் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் நடந்த நிலையில், 15 வயது சிறுமி பச்சிளம் குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 14 ஆம் திகதி வெளியிட்ட விசேட அறிக்கையில், ஒரு தாயாக தான் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை, சிறுமியும், பச்சிளம் குழந்தையும் தற்போது பாதுகாப்பாக இருப்பது குறித்து நிம்மதி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து அரசாங்க தலையீடுகளையும் செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நவீன சமூகத்தின் சிக்கல்களுக்கு மத்தியில், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய பரஸ்பர தொடர்பும், உரையாடலும் படிப்படியாக மறைந்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால், மிகவும் பாதுகாப்பான சூழலாக இருக்க வேண்டிய தங்கள் சுற்றுப்புறங்களிலேயே பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாக மாறி வருவதாக அவர் கூறினார்.

குடும்பங்களுக்குள் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், எந்த சூழ்நிலையிலும் தங்கள் பெற்றோரிடம் தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாதுகாப்பான குடும்ப சூழலை உருவாக்குவதும், திறந்த உரையாடலை ஊக்குவிப்பதும் இது போன்ற ஆபத்தான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடப்பதை கணிசமாக குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

பாதிக்கப்படக்கூடிய நபர்களுடன் தொடர்பு கொள்ளும் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினர், மக்கள் எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ள பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, 2027 ஆம் ஆண்டு முதல் புதிய மாற்று பராமரிப்பு கொள்கையை (Alternative Care Policy) செயல்படுத்த நிதி ஒதுக்கீடு உட்பட நடவடிக்கைகளை அமைச்சு எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்திய அவர், பிள்ளைகள் விடயத்தில் அனைத்து குடிமக்களும் மேலும் உணர்வுபூர்வமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here