நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
இதில் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அமெரிக்கா அணியை வீழ்த்தியிருந்தது.
இரண்டாவது போட்டியில் நேபாள அணி ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது.
மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 46.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக கம்ஷாஸைக் 54 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் நதன் எட்வர்ட் 3 விக்கட்டுக்களையும், இசை தோர்னே, ரனைகொ ஸ்மித் மற்றும் தர்ரிக் எட்வர்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் மேற்கிந்திய தீவுகள் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 41 ஆவது ஓவரில் 8 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஸ்டீபன் பஸ்கால் 58 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் டஷீம் சௌத்ரி அலி 3 விக்கட்டுக்களையும், ஃபர்ஹான் அஹமெட் 2 விக்கட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக நதன் எட்வர்ட் தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 4 புள்ளிகளுடன் B குழுவின் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது நிலையில் உள்ளது.
தற்போது நடைபெறுவரும் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், சிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளும் தென்னாபிரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளும் மோதுகின்றன.