மாஸ்கோ மற்றும் பெர்லின் இடையேயான இராஜதந்திர பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா, ஜெர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மன் துணைத் தூதரகம் செப்டம்பர் 18-ஆம் திகதிக்குள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும், அதே திகதிக்குள் அனைத்து ஊழியர்களும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெர்மனி பேன் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தையும், பெர்லினில் உள்ள ரஷ்ய ஹவுஸ் கலாசார மையத்தையும் மூடியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 4-ஆம் திகதி லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று குற்றம் சாட்டி ஜெர்மனி இந்த நடவடிக்கைகளை அறிவித்தது. எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

இதனுடன், ரஷ்யாவில் உள்ள ஜெர்மனியின் Goethe-Institute கலாசார மையங்களையும் மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. அந்த மையங்களின் ஊழியர்கள் செப்டம்பர் 13-ஆம் திகதிக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்திற்கு பெர்லினே காரணம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ஜெர்மனி, மாஸ்கோவின் இந்த முடிவை விமர்சித்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துணைத் தூதரகத்தை மூடுவது ஒரு “வருத்தமளிக்கும் தவறான விடயம்”என்றும், இது இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கபூர்வமான உறவு திரும்புவதை மேலும் கடினமாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here