இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் கூட்டம் இன்று (15) காலை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டுக்கான அமைச்சகத்தின் பட்ஜெட் முன்மொழிவுகளைப் பற்றிய ஆரம்ப கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்குபற்றினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள எட்டு நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவை விரிவாக பரிசீலிக்கப்பட்டன.
இக் கல்ந்துரையாடலின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னைய பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை குறித்த திட்டங்களுக்கு பயனுள்ளதாகச் செலவிடப்படவில்லை என்பதை வலியுறுத்தினார். மேலும் இந்த நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட நிதியாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்கு நேரடியான நன்மை கிடைப்பதை முதன்மையாகக் கருத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வலுவான விளையாட்டு பண்பாட்டை உருவாக்குவது முக்கியக் குறிக்கோள் என்பதை வலியுறுத்திய அவர், விளையாட்டு சங்கங்களும், விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தேவையையும் முன்வைத்தார்.








