பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, பேலியகொட ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி மற்றும் சிற்றூந்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அப்பொழுது தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த குழந்தை காயமடைந்து சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்கள் 23 நாட்களேயான பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், குழந்தையின் தாயும், முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த மற்றொருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையின் உடல் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பேலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








