வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (13) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய இடமாற்றங்களில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் மனப்பான்மை காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினர்.

அவர்கள் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் தங்கள் சுயலாபத்திற்கும், அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்க நலன்களுக்காகவும் செயற்படுகின்றனர். இதனால், பல ஆசிரியர்கள் நீதி இழக்கின்றனர்.

அத்துடன், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்ட மற்றும் அதி கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாகாணக் கல்வி பணிப்பாளர் மற்றும் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தபோதிலும், ஆசிரியர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். சிலர் கல்வி அதிகாரிகளால் அவமதிப்பான வார்த்தைகளால் பேசப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், நான்கு தொழிற்சங்கங்களின் இணைப்பில் விசேட மேல்முறையீட்டு சபை ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த சபையின் கீழ் 41 ஆசிரியர்களுக்கான இடமாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், ஒரு ஆசிரியரின் விஷயம் மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும், முன்னாள் மாகாணக் கல்வி பணிப்பாளர் (தற்போது மேலதிக கல்வி பணிப்பாளர்) பிரெட்லி அவர்கள் தாபன விதிகளை மீறி, அரசியல் லாபத்திற்காக செயற்பட்டுள்ளார் என குற்றம் சாட்டினர்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னால் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here