ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான ஜகத் விதானவின் தொடர்புகளே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்துடன் அரசியல் நோக்கம் எதுவும் தொடர்பில்லை என்றும், புலனாய்வு அறிக்கைகள் அதனை உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜகத் விதானவின் கோரிக்கையின் பேரில், அவரது பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தற்போது, அச்சுறுத்தலின் மூல காரணத்தை உறுதிப்படுத்தவும், இதில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.








