இலங்கை–ரஷ்ய நட்புறவுச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ரஷ்ய புவியியல் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான கலாநிதி சமன் வீரசிங்கவுக்கு, ரஷ்யாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான “நட்புக்கான விருது” (Order of Friendship) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய கலாநிதி சமன் வீரசிங்க, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல தசாப்தங்களாக செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின் ஆற்றிய உரையில் அவர், தனது பங்களிப்பை அங்கீகரித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கை–ரஷ்ய கலாசார, கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உறுதியளித்தார்.
விருது வழங்கும் விழாவில் பேசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், “சமன் வீரசிங்க ரஷ்யாவுடனான கலாசார மற்றும் மனிதாபிமான உறவுகளை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளார்” என பாராட்டினார்.
இந்த நிகழ்வு ரஷ்ய தேசிய ஒற்றுமை தினத்தை ஒட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








