பார்வையைச் சிதைக்கக்கூடிய ஒரு படிப்படியான கண் கோளாறான கெரட்டோகோனஸ் (Keratoconus), இலங்கையில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் வைத்தியசாலை எச்சரித்துள்ளது.

​இந்த நோய் அரிதான ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்டதாகவும் தற்போது எட்டு வயது சிறுவர்களிடமும் கூட இது வெளிப்படுவதாகக் கொர்னியா சத்திரசிகிச்சை நிபுணர் கலாநிதி. குசும் ரத்னாயக்க  தெரிவித்தார்.

உலக கெரட்டோகோனஸ் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

​கெரட்டோகோனஸ் நோயினால், கண்ணின் தெளிவான முன் மேற்பரப்பான கொர்னியா (விழித்திரை) படிப்படியாக மெலிந்து, கூம்பு வடிவில் வீங்குகிறது. இதனால், பார்வை மங்கலாகவோ அல்லது சிதைந்தோ காணப்படுகிறது.

​தேசிய அளவில் ஆய்வு எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை என்றாலும், இந்த நோயின் தாக்கம் 10 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் பொதுவாக இளம்பருவம் அல்லது ஆரம்பகால வயது வந்தோரிடத்தில் தொடங்குகிறது என்றும் கலாநிதி ரத்னாயக்க குறிப்பிட்டார்.

​மேலும் இந்த நோய்க்கு குடும்ப வரலாறு உள்ளவர்கள், அடிக்கடி கண்களைத் தேய்ப்பவர்கள், ஒவ்வாமை கண் நோய்கள் உள்ளவர்கள் அல்லது டவுன் சிண்ட்ரோம் மற்றும் இணைப்புத் திசு கோளாறுகள் போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு கெரட்டோகோனஸ் வரும் ஆபத்து அதிகம் எனவும் அவர் கூறினார்.

​இதற்கான சிகிச்சை முறைகளாக,

​நோயின் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன:

​ஆரம்ப கட்டங்களில்: கண்ணாடிகள் மற்றும் சிறப்புத் தொடர்பு லென்ஸ்கள் (Contact Lenses)அணிதல்

​தீவிர அல்லது பாதிப்பு ஏற்பட்ட கட்டங்களில்: கொர்னியா மாற்று அறுவை சிகிச்சை (Corneal Transplants).

​சரியான நேரத்தில் கண்டறிந்து நிர்வகிக்கப்படாவிட்டால், சிகிச்சை அளிக்கப்படாத கெரட்டோகோனஸ் கடுமையான பார்வை குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் கலாநிதி ரத்னாயக்க எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here