இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும், பகிரப்பட்ட வரலாறு, நாகரிகத் தொடர்புகள் மற்றும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய வீட்டுவசதித் திட்டம் மற்றும் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் கவனம் செலுத்தும் இலங்கைக்கான 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் கீழ் உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முன்னெடுப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
குறிப்பாக, கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகங்களுக்கு பயனளிக்கும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேநேரம் இரு நாடுகளிலும் உள்ள மீனவ சமூகங்களின் வாழ்வாதாரங்களைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான முறையில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளித்து, இரு தரப்பினரும் விவாதித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.






