அமெரிக்க குழு,இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார்.
எவ்வாறாயினும் பாகிஸ்தானில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவை ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆராக்ஷி தலைமையிலான குழு சந்திக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சர் பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர் ஓமான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உடனான போருக்கு மத்தியில் ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
ஈரான், பதிலடி வழங்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.
அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.








