ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
மே 25 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர், தாம் கையை உயர்த்தத் தயாராக இருப்பதாக மே தினப் பேரணியில் ஜனாதிபதி கூறிய கருத்துக்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதியின் கருத்து, நிலுவையில் உள்ள ஒரு தீர்ப்பு பற்றி அறிந்து வைத்திருப்பதை வெளிப்படுத்துவதாகவும், நீதித்துறையை நிறைவேற்று அதிகாரிகளின் விருப்பத்திற்குக் கீழ் கொண்டுவரும் ஒரு முயற்சிக்கு இது சமம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
“ஜனாதிபதியின் அறிவிப்பு சுதந்திரமான நீதித்துறை செயல்முறைக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும்.
இலங்கையில் நீதித்துறை அதிகாரம் என்பது எந்தவொரு ஜனாதிபதி, அமைச்சர் அல்லது அரசியல் கூட்டணியின் விருப்பத்திலிருந்து செயற்படுத்தப்படுவதல்ல. அது மக்களிடமிருந்தும் அரசியலமைப்பிலிருந்தும் பெறப்படுகிறது.
நீதித்துறை, தொடர்ந்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுவரும் சில நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் நீதித்துறையை இலக்காகக் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தனது கருத்துக்களைத் திரும்பப் பெறுமாறும் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஜனாதிபதியும் அரசாங்கமும் சொல்லிலும் செயலிலும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.







