மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு, பணம் பெறும் நோக்கில் சரீரப்பிணைக்கு நின்ற இரு நபர்களை இணைப்பதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஏர்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு, பொருத்தமற்ற பிணைத்தாரர்களாக நிற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,மே 07 அன்று அவ்விருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரும் தலா ரூ. 15,000 பெற்று கொண்டு பிணைதாரர்களாக ஆஜராகியுள்ளனர் என தெரிய வந்ததோடு நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் பொலிஸ் விசாரணையில், சந்தேக நபர்களுக்கு நிரந்தர வேலை அல்லது நிலையான வருமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
கபில சந்திரசேனவை தனிப்பட்ட முறையில் பிணைத்தாரர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி லஹிரு சில்வா, சந்தேக நபர்களை மே 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, பிணை மனுவிற்காக கிராம அலுவலர் சான்றிதழ்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிணை செயல்முறையைச் சுற்றியுள்ள சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் குறித்து நீதிமன்ற அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, கெசல்வத்த பொலிசார் இந்தக் கைதுகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியதை அடுத்து, அவரைக் கைது செய்து கொழும்பு நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
எனினும், மே 08 அன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளு பிட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பு குறித்த விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








