பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த துறவியின் தண்டனையை இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பதின்வயது முறைப்பாட்டாளரின் சாட்சியத்தில் இருந்த முக்கிய முரண்பாடுகள் காரணமாக அது “நம்பகத்தன்மையற்றது” என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016 மார்ச் மாதம், விகாரையின் குடியிருப்புப் பகுதிக்குள் வைத்து 13 வயது சிறுவனைத் துன்புறுத்தியதாக சீதாவக்க சொரத்த தேரரை குற்றவாளி என அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும், வன்கொடுமை எவ்வாறு நடந்தது என்பது குறித்த சாட்சியின் வாக்குமூலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டி, அந்தத் தண்டனை செல்லாது என்று இரு நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அமர்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
குறித்த துறவிக்கு எதிரான வழக்கு, வணக்கஸ்தலத்தை கடந்து சென்றபோது தன்னை உள்ளே அழைத்ததாகக் கூறிய சிறுவனின் சாட்சியத்தை பெரிதும் சார்ந்திருந்தது.
ஆனால், மேல்முறையீட்டு விசாரணையின் போது, அந்தச் சிறுவனின் நீதிமன்ற சாட்சியத்திற்கும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் (JMO) அவன் அளித்த ஆரம்ப வாக்குமூலங்களுக்கும் இடையே கணிசமான முரண்பாடுகள் இருப்பதாக துறவியின் சட்டக் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
முறைபாட்டளார் சம்பவத்தின் அடிப்படைக் காரணத்தை சீராக நினைவுகூர முடியாததால், அது முழு விவரிப்பின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்ட முன்னுதாரணத்தை மேற்கோள் காட்டி, ஒரே நிகழ்வு தொடர்பில் வெவ்வேறு நேரங்களில் முரண்பட்ட தகவல்களை வழங்கும் ஒரு சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தண்டனையை வழங்க முடியாது என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதற்கமைய மேல்முறையீட்டு நீதிமன்றம், தண்டனையையும், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும், இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்துள்ளது. தீர்ப்பை உடனடியாகச் செயல்படுத்துவதற்காக அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.







