நாட்டின் தற்போதைய போக்கின் மீதான மக்களின் அதிருப்தி, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மக்களைத் தூண்டக்கூடும் என்றும், 2029-ல் எம்.பி. நாமல் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றும் ராமநாதன் அர்ச்சுனா எம்.பி. கூறியுள்ளார்.
‘2029-ல் நாமல் ஆட்சிக்கு வருவார், அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆனால், நாடு இருக்கும் தற்போதைய நிலையில், மக்கள் அதை ராஜபக்சக்களிடமே மீண்டும் ஒப்படைப்பார்கள்’ என அவர் கூறினார்.
இதேநேரம் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சுனா எம் பி, தற்போதைய எதிர்க்கட்சியையும் விமர்சித்ததோடு, ஒரு திறமையான எதிர்க்கட்சித் தலைவர் வலிமையானவராகவும், வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் மென்மையானவர் என்பதால் எதிர்க்கட்சியில் இருந்து , பூங்கொத்துகளை வீச முடியாது,செங்கற்களையே வீச வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது வலுவான எதிர்க்கட்சித் தலைவர் இல்லை எனவும் அவர் கூறினார்.
இதேநேரம், நாமல் ராஜபக்ச பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவராக இருப்பாரா என்று கேட்கப்பட்டபோது, ராஜபக்சவுக்கு அந்தப் பதவி தேவையில்லை என்றும் அவர் ஜனாதிபதியாகிவிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல விஜய் ஜோசப்பின் அரசியல் எழுச்சியைத் தான் கணித்தபோது, முன்பு “பைத்தியக்காரன்” என்று நிராகரிக்கப்பட்டதாகவும் தாம் கணித்தது போல விஜய் தேர்தல் வெற்றியை அடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.







