வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக மரணித்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் நேற்று (21.08) மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி வேண்டும் எனவும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும், தொடரும் மருத்துவ மாபியாக்களின் அசமந்த போக்கிற்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் சிசுவின் சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவரை நாம் நம்புகின்றோம். நீதிபதி எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் உறவினர்கள் கோரியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலை பிரதான வாயில் அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.








