ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க காலை வேளையில் தேவாலயத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கான நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனாதிபதிக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கவலைகள் மற்றும் சிரமங்களை அவருடன் நேரடியாகப் பகிர்ந்துகொண்டனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிகவும் துயரமான அனர்த்தம் எனவும், அதனை காலப்போக்கில் புதைக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நீதிக்கான நம்பிக்கையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய காரணிகளில் ஒன்று என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்கள் தேடும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே தமது இலக்கு என குறிப்பிட்ட அவர், பிரஜைகளின் அபிலாஷைகள் தமக்கான அபிலாஷைகளுடன் இணங்குவதாகவும் வலியுறுத்தினார். இதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உறுதியளித்துள்ளார்.
எந்தவொரு முன்கூட்டிய முடிவுகளும் அல்லது பக்கச்சார்புகளும் இல்லாமல் விசாரணைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்டிருக்கலாம் என்ற பரவலான நம்பிக்கை சமூகத்தில் இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஒப்புக்கொண்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியிடப்பட்டால், அது ஒரு ஆழமான சோகம் என்று அவர் கூறினார். நாட்டில் அரசியல் இவ்வாறானதொரு உச்சகட்டத்தை எட்டியிருந்தால், இந்த அபாயகரமான நிலைமையை இல்லாதொழிப்பதற்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த நேரத்தில் அரசாங்க எந்திரம் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், நாடு ஆபத்தான ஸ்திரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் என்று அவர் எச்சரித்தார். எனவே, இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டியது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கிட்டத்தட்ட 274 பேரின் உயிர்களை பலிவாங்கிய மற்றும் பலரை காயப்படுத்திய அவலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அவர்களின் குடும்பங்களின் அன்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தாக்குதல்களுக்குப் பிறகு இன்னும் பெரிய சமூகப் பேரழிவைத் தடுக்க உதவிய பாதிரியார்கள் ஆற்றிய பங்கிற்கு அவர் தனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர்களின் முயற்சிகளுக்கு ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தார்.
சமூகத்தில் உள்ள பிணைப்பு, நம்பிக்கை, நல்லிணக்கம் பலவீனமடைந்து, பிறரை கோபத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கத் தொடங்கினால், அது சமூகத்தின் நல்வாழ்வுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார். இதன் வெளிச்சத்தில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஐந்து வருடங்களாக, ஏப்ரல் 21 ஆம் திகதி வீதிகளில் ஒன்றுகூடியவர்கள் நீதிக்கான நம்பிக்கையினால் உந்தப்பட்டவர்கள் என்றும், அது அவர்களை வருடா வருடம் நிலைநிறுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்ட போதிலும் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு பேராயர் கர்தினால் கர்தினால் ரஞ்சித் அவர்கள் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில், தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து பொதுமக்கள் தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அங்கீகரிப்பதாகவும், அவரது நேர்மையை பாராட்டுவதாகவும், அதிமேதகு கர்தினால் ரஞ்சித் அவர்கள், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீது நம்பிக்கை வைத்துள்ளார். நீதிக்கான வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறி நீதி வழங்குவதை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
Rev.Fr. கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் பொறுப்பதிகாரி மஞ்சுளா நிரோஷன், ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் பக்தர்கள் என பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.








