சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹொனர் 25’ என்ற அந்தக் கப்பல், புதன்கிழமை இரவு, கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ஆறு துப்பாக்கிதாரிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சோமாலியத் தலைநகரான மொகடிஷுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட கப்பலானது, சோமாலிலாந்து குடியரசில் உள்ள பெர்பெரா துறைமுகத்திலிருந்து பெப்ரவரி 20 அன்று புறப்பட்டு, அமெரிக்க ஈரான் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அருகில் வந்தடைந்துள்ளது.
பின்னர்,குறித்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் வட்டமிட்டுள்ளதோடு, ஏப்ரல் 2 ஆம் திகதி மீண்டும் மொகடிஷுவை நோக்கிச் சென்றடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கப்பலில், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர், ஒரு இலங்கையர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் என 17 பணியாளர்கள் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகளவிலான கப்பல் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறும் குறித்த பகுதியில் 3 வருடங்களுக்கு முன்னர் அவை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கப்பல் கடத்தல்கள் தலை தூக்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த கப்பல் கடத்தல் சோமாலியத் தலைநகரான மொகடிஷுவில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து அந்நகரில் பெட்ரோல் விலை ஏற்கனவே மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன,
எவ்வாறாயினும் சோமாலிய அதிகாரிகளோ அல்லது சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் ஐரோப்பிய கடற்படையோ, இந்தக் கடத்தல் குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.








