முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள ரத்வத்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் 50 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவித்தார்.
குறிப்பிட்ட அலுவலகத்தில் தான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றியதாக தெரிவித்த டி.ஐ.ஜி தல்துவ, தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆயுதத்தால் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
“ஆயுதம் அவருக்கு உரிமத்துடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் உரிமத்தை புதுப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட அவர், நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்,” என்றார்.
உயிரிழந்தவர் வெரல்லகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








