ஹட்டன் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர்கள் சனிக்கிழமை (26) ஹட்டன் நகர் முழுவதும் பரிசோதனைகளை மேற்கொண்டபோது ஹட்டன் பிரதான வீதி உணவகம் ஒன்றில் அவர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் சமையலறை பகுதியில் அசுத்தமான முறையில் உணவுப் பொருட்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளரை எச்சரித்ததுடன் அவ்விடத்தை சுத்தம் செய்ய பணித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் முரண்பட்ட உணவக உரிமையாளர் தானே அடுத்த ஹட்டன், நகரசபையின் தலைவர் என்று கூறியதுடன் தனது உணவகத்துக்கு சுகாதார பரிசோதகர்கள் வரக் கூடாது எனக் கூறியுள்ளார்.
மேலும், சுகாதார பரிசோதகர்கள் குழுவுக்கு தலைமைதாங்கிய பிரதான பரிசோதகர் எஸ்.காமதேவனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் அவரது குடியிருப்பு இருக்கும் இடம் தெரியும் என்றும் தன் மீது நடவடிக்கை எடுத்தால் தானும் எடுக்கவேண்டிய விதத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து மேற்படி சுகாதார பரிசோதகர் குழுவினர் தமது பணிக்கு இடையூறு விளைவித்த காரணத்தினால் இந்த உணவக உரிமையாளருக்கு எதிராக நேற்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததுடன் பிரதான சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து பிரத்தியேகமாக முறைப்பாடொன்றை செய்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உணவக உரிமையாளர் சனிக்கிழமையன்று மாலை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








