கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காது போனமை வருத்தமளிப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் சாத்திய படவில்லை. தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆட்சி அமைக்கும் அனுர குமார திசாநாயக்க அரசுக்கும் வாழ்த்துக்கள்.
நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க தமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
இன்று ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது. இதையிட்டு நான் மன வருத்தம் அடைகிறேன்.
எனினும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களைத் தக்க வைத்துக் கொண்டு, இன்று அதை மூன்றாகவும் அதிகரித்துக் கொண்ட, சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் உடன்பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களில் 237,123 விருப்பு வாக்குகளை எமது வாக்காளர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








