57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் வைத்திருந்த 04 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை கொள்ளவனவு செய்ய முயன்றுள்ளனர்.
மாணவர்களிடம் இருக்கும் நாணயத்தாள்கள் போலியானவை என அறிந்து கொண்ட குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நான்கு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெருங்கிய நபரொருவர் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த நாணயத்தாள்களை தங்களுக்கு கொடுத்ததாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.







