சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04.01.2025) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் , தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆசியாவின் முதன்மை இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இம்முறை 31 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சீனா,இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கைக்கு முதல் முறையாக வரும் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதோடு, இரத்தினபுரி, எலஹெர,பேருவல,எஹெலியகொட,காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்நாட்டு இரத்தினக்கல் கொள்வனவாளர்கள் பலரும் கண்காட்சியில் பங்குபற்றியுள்ளனர்.
தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரும், தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.






