முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  சுரேஷ் ரெய்னா தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்திக்கொள்ளப்போகின்றார் எனும் அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல் (Mister IPL) மற்றும் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா ஆவார்.

இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

முதலில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் சிறிது காலம் விளையாடி ஓய்வு பெற்றார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியதனால் தமிழ் ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை மிகவும் பிடிக்கும். இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுக்கிறார் எனும் செய்தி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் (DKS ) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றபோது, இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார் என செய்திகள் வெளியாகின.

லோகன் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ரெய்னா நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை இந்திய கிரிக்கெட் மற்றும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சிவம் தூபே வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சுரேஷ் ரெய்னா கூறுகையில்,  “தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது” எனவும்  “பல கிரிக்கெட் போட்டிகளில் இங்கு ஆடியிருக்கிறேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here